×

கணினி உதவியாளர், கேமரா ஆபரேட்டர்கள் இன்று பணியில் சேராவிட்டால் நடவடிக்கை: பதிவுத்துறையில் பரபரப்பு

சென்னை: தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இதன் மூலம் வீடு, விளை நிலங்கள் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த அலுவலகங்களில் கேமராக்களை இயக்கவும், கணினி சார்ந்த பணிகளை மேற்கொள்ளவும் ஒப்பந்த அடிப்படையில் 727 கணினி உதவியாளர்கள் மற்றும் 575 கேமரா ஆபரேட்டர்கள் என மொத்தம் 1,302 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள், தனியார் நிறுவனத்தின் சார்பில் இப்பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாத ஊதியமாக தனியார் நிறுவனம் தான் வழங்கி வருகிறது.

இந்த நிலையில் கணினி உதவியாளர்கள் கேமரா ஆபரேட்டர்கள் இடைத்தரகர்கள் உடன் இணைந்து கொண்டு செயல்படுவதாக சார்பதிவாளர்கள் சிலர் பதிவுத்துறை ஐஜி ஜோதி நிர்மலாசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அவர்களை ஒட்டுமொத்தமாக பணியிட மாற்றம் செய்து பதிவுத்துறை ஐஜி உத்தரவிட்டார். இந்நிலையில், கேமரா ஆபரேட்டர்கள் மற்றும் கணினி உதவியாளர்களுக்கு கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக சம்பளம் தரவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் அவர்களை பணி இடமாற்றம் செய்திருப்பது ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த ஊழியர்கள் ஊதியம் வழங்கினால் மட்டுமே பணி மாறுதலில் செல்வோம் என்று போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்குள் கனிணி உதவியாளர்கள், கேமரா ஆபரேட்டர்கள் பணியில் சேராவிட்டால் அவர்கள் உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று ஐஜி அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது, அந்த ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

* சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டவர் பணி நீக்கம்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சார்பதிவாளர் அலுவலகங்களில் கேமரா ஆபரேட்டராக பணிபுரிந்து வந்த ராஜரத்தினம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அதில், கடந்த ஓராண்டாக எனக்கு ஊதியம் வழங்கவில்லை. என்னை போன்று பலருக்கு ஊதியம் கிடைக்கவில்லை. எனவே, ஊழியர்கள் அனைவரும் பதிவுத்துறை ஐஜி அலுவலகத்துக்கு சென்று இது தொடர்பாக கேள்வி கேட்போம் என்று கூறியிருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதை தொடர்ந்து அந்த கேமரா ஆபரேட்டரை பணி நீக்கம் செய்து தனியார் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவரை பணிக்கு வேறு எங்கேயும் நியமிக்கக்கூடாது என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.

Tags : camera operators , Computer Assistant, Camera Operators, Today, Task, Operation, Recording
× RELATED கேமரா ஆபரேட்டர்கள் முறைகேட்டில் ஈடுபட்டால் கிரிமினல் நடவடிக்கை